இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இப்போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறினர். எனினும் அந்த அணியில் ராஸ் டெய்லர் 86, ஹென்ரி நிக்கோல்ஸ் 42 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் லசித் எம்புல்தேனியாவின் பந்தை எதிர்கொண்டார். அந்தப் பந்தை போல்ட் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தபோது, அவரது பேட்டின் விளிம்பில் பட்டு எகிறி நேராக போல்ட் அணிந்திருந்த ஹெல்மெட்டில் போய் சிக்கிக்கொண்டது.
உடனடியாக பந்து எங்கு சென்றது எனத் தெரியாமல் திகைத்த போல்ட்டை சுற்றிக்கொண்ட இலங்கை வீரர்கள், கோழி பிடிப்பது போல பந்தை பிடிக்க அவரைச் சுற்றி வட்டமிட்டனர். பின்னர் அனைவரும் சிரித்துக்கொண்டே போல்ட்டின் ஹெல்மெட்டில் இருந்த பந்தை எடுத்த பின் ஆட்டம் தொடங்கியது.
பின்னர் போல்ட் ஹெல்மெட்டில் சிக்கிய பந்துடன் இருப்பது போன்ற படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதைத் தொடர்ந்து ட்விட்டர் வாசிகள், போல்ட்டிற்கு கேட்ச் பிடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்; அது கைகளால் மட்டும் இல்லை என பல்வேறு கமெண்ட்டுகளை பதிவிட்டிருந்தனர். இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.