கிரிக்கெட் மீது இருக்கும் பேரார்வத்திற்காக ஒரு சில வீரர்கள் களத்தில் எல்லை மீறி தங்களது அணிக்காக முழு அர்பணிப்பை தருவார்கள். ஆனால், தேவையில்லாத நேரத்தில் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டால் அது நகைச்சுவையாக மாறிவிடும். அந்தவகையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் தொடரில் ஒருவர் கடமை உணர்ச்சி மீறி நடந்துகொண்ட செயல், பார்வையாளர்களுக்கு சிரிப்புவரச் செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் நியூசவுத் வேல்ஸ் - குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இதில், குவியன்ஸ்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசவுத் வேல்ஸ் அணியின் கடைசி விக்கெட்டுக்காக ஹாரி கான்வே களமிறங்கினார். அப்போது, குயின்ஸ்லாந்து பந்துவீச்சாளர் கமரோன் கனோன் வீசிய பந்து, ஹாரி கான்வேயின் பேட்டில் எட்ஜ் வாங்கி பவுண்டரிக்கு சென்றது. இருப்பினும், ஹாரி கான்வே இரண்டு ரன்கள் ஓடினார். இதில், காமெடி என்னவென்றால், நான் ஸ்ட்ரைக்கில் இருந்த நபர் ரன் ஓடவே இல்லை. இவர் மட்டும்தான் ரன் ஓடியுள்ளார். இவரது இந்த நடவடிக்கையைக் கண்டு களத்திலிருந்த குயின்ஸ்லாந்து வீரர்களும் சிரித்தனர்.
பந்து பவுண்டரிக்குச் சென்றப்பிறகும் இரண்டு ரன்கள் அல்ல எத்தனை ரன்கள் ஓடினாலும் நான்கு ரன்களுக்கு மேல் ரன்கள் உங்களுக்கு கிடைக்காது என வர்ணனையாளர் ஒருவர் கூறியுள்ளார். தற்போது ஹாரி கான்வேயின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.