ராவில்பிண்டியில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 143 ரன்கள் அடித்தார். கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஏழாவது இடத்திலிருந்த பாபர் அசாம் தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இதனால், ஐந்தாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆறாவது இடத்திற்கும், ஆறாவது இடத்திலிருந்த இந்தியாவின் புஜாரா ஏழாவது இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.
இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசானே, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றனர். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 13 அரைசதங்கள், ஐந்து சதங்கள் உட்பட 1850 ரன்களை எடுத்துள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியல்
- விராட் கோலி (இந்தியா) - 928 புள்ளிகள்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 913 புள்ளிகள்
- மார்னஸ் லபுசானே (ஆஸ்திரேலியா) - 827 புள்ளிகள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 814 புள்ளிகள்
- பாபர் அசாம் (பாகிஸ்தான்) -800 புள்ளிகள்
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 793 புள்ளிகள்
- புஜாரா (இந்தியா) - 791 புள்ளிகள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 764 புள்ளிகள்
- ரஹானே (இந்தியா) - 758 புள்ளிகள்
- பென் ஸ்டோக்ஸ் ( இங்கிலாந்து) - 718 புள்ளிகள்
இதையும் படிங்க:ஒருநாள் தொடரை வெல்ல நாங்கள் தகுதியானவர்கள் அல்ல' - கோலி