சமகால கிரிக்கெட்டில் ஃபேப் ஃபோர் என அழைக்கப்படும் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருக்கு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் சரியான போட்டியை அளித்து வருகிறார்.
விராட், வில்லியம்சன் நிர்ணயித்துள்ள இலக்கை பாபர் அடைய வேண்டும் - சோயப் அக்தர்
லாகூர்: குறுகிய ஓவர் போட்டிகளில் விராட் கோலி, வில்லியம்சன் ஆகியோர் நிர்ணயித்துள்ள இலக்குகளை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொட வேண்டும் என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திலேயே தனது பேட்டிங்கால் சர்வதேச ரசிகர்கள் ஈர்த்துள்ள பாபர் அசாமை, அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தானின் விராட் கோலி என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் பாபர் அசாம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பேசுகையில், '' பாபர் அசாம் மிகவும் திறமையான வீரர். விராட் கோலி, வில்லியம்சன், ரூட் ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் சேர்த்து நிர்ணயித்த இலக்குகளை பாபர் தொட வேண்டும்.
விராட் கோலி, பாபர் இருவரையும் தற்போது ஒப்பிட முடியாது. ஏனென்றால் விராட் கோலி 10 ஆண்டுகளாக விளையாடி பல சாதனைகளைப் படைத்துவிட்டார். ஆனால் பாபர் இப்போது தான் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். எதிர்காலத்தில் இருவருக்கும் நல்ல போட்டி இருக்கும்'' என்றார்.