ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தங்களது ரெட்ரோ ஜெர்சியில் களமிறங்கினர். இதனால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்களின்றி நடத்த வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியது.
இதையடுத்து இரு அணி கேப்டன்களும் ஆளில்லா மைதானத்தில் முதல் முறையாக டாஸ் போடுவதற்காக களமிறங்கினர். இதில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் வார்னர் - ஃபின்ச் இணை களமிறங்கியது. இரு வீரர்களும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைக் கடந்தனர். ஆனால் ரெட்ரோ ஜெர்சியில் களமிறங்கியதாலோ என்னவோ, ஸ்ட்ரைக் ரேட்டும் ரெட்ரோ ஸ்டைலில் குறைவாகவே சென்றது.
முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் , வார்னர் 88 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஃபின்ச் 75 பந்துகளில் 60 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித், டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றனர். இதையடுத்து லபுஷானே மட்டும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.