ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில், பெர்த் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி (பாங்ஸிங் டே) கடந்த டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 467 ரன்களைச் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 114, ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னர் நான்கு, டிம் சவுதி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணி பெட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 148 ரன்களுக்குச் சுருண்டது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதாம் 50 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெட் கம்மின்ஸ் ஐந்து, ஜேம்ஸ் பட்டின்சன் நான்கு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 319 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 54.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தபோது டிக்ளேர் செய்ததால், நியூசிலாந்து அணிக்கு 487 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் டாம் லதாம் எட்டு ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் ரன் ஏதும் எடுக்காமலும், ராஸ் டெய்லர் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில், விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தொடக்க வீரராகக் களமிறங்கிய டாம் பிளண்டல் நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து சதம் விளாசி அசத்தினார். 210 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 121 ரன்கள் எடுத்திருந்த அவர், லாபுசாக்னே பந்துவீச்சில் லயானிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.
முதல் ஓவரில் களமிறங்கிய இவர் 71ஆவது ஓவரில்தான் தனது விக்கெட்டைப் பறிகொடுத்ததால், நியூசிலாந்து அணி 71 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. காயம் காரணமாக டிரெண்ட் போல்ட் பேட்டிங் செய்ய வராததால், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயான் நான்கு, ஜேம்ஸ் பட்டின்சன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க:கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், வீராங்கனை அஞ்சும் சோப்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது