கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் துடிப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்னும் கனியை பெற முடியும். அதிலும் குறிப்பாக ஃபீல்டிங் செய்யும் சமயங்களில் வீரர்கள் கண் கொத்தி பாம்பாக கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் பல கிரிக்கெட் வீரர்கள் சில அட்டகாசமான கேட்ச்கள் பிடித்தும், ரன் அவுட் செய்தும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதுண்டு.
இதுபோன்று அவர்கள் ஃபீல்டிங் செய்யும் சமயங்களில் சில தர்ம சங்கடமான சம்பவங்கள் நிகழ்வதும் வழக்கம்தான். ஆனால் என்ன நடந்தாலும் சில வீரர்கள் அதை கருத்தில் கொள்ளாமல் தங்களின் குறிக்கோளில் உறுதியாக இருப்பார்கள்.
அதுபோன்று ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தனது பேண்ட் கழன்று விழுந்தபோதும், அதை சற்றும் பொருட்படுத்தாமல் துடிப்புடன் செயல்பட்டு எதிரணி வீரரை ரன்-அவுட் செய்து அனைரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் உள்ளூர் அணிக்காக விளையாடிவரும் மார்னஸ் லபுஸ்சாக்னேதான் அந்த துடிப்பு மிக்க வீரர். நேற்று நடைபெற்ற மார்ஷ் கோப்பை தொடரில் விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய குயின்ஸ்லேண்ட் அணி 50 ஓவர்களில் 322 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய விக்டோரியா அணி 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த போட்டியில் 29ஆவது ஓவரில் ஐந்தாவது பந்தில் எதிரணி வீரர் சதர்லேண்ட் பந்தை கவர் திசையில் அடித்துவிட்டு ஓடினார். அப்போது அங்கு ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த மார்னஸ் லபுஸ்சாக்னே, தனது இடப்புறம் டைவ் அடித்து பந்தை தடுத்து நிறுத்தியபோது அவரது பேண்ட் கழன்றது. ஆனால் அதை பொருட்படுத்தாத லபுஸ்சாக்னே பந்தை எடுத்து கீப்பரிடம் எறிந்தார். அதை கீப்பர் விக்கெட்டாக மாற்ற உற்சாகத்தில் எழுந்து நின்று தனது பேண்ட்டை சரி செய்துகொண்டார் லபுஸ்சாக்னே.
பின்னர் டிவியில் ரீப்ளே செய்தபோது எதிரணி வீரர் கிறிஸ் டிரெமெயின், ரன்-அவுட் ஆனது உறுதியாகிறது. மார்னஸ் செய்த இந்த ரன்-அவுட் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதையடுத்து இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கினர்.
ஆஷஸ் தொடரில் அசத்திய மார்னஸ் லபுஸ்சாக்னே
மார்னஸ் லபுஸ்சாக்னே சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஸ்டீவ் ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டபோது அவருக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.