ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசாத் ஷஃபிக் 76 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இதில் ஜோ பர்ன்ஸ் 97 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வார்னருடன் ஜோடி சேர்ந்த லபுசாக்னே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 154 ரன்களில் வெளியேற, லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப்பதிவு செய்தார். அதன் பின் அதிரடியாக விளையாடிய அவரும் 185 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 580 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் யாஷிர் ஷா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.