ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் ஏற்கெனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஜனவரி 7ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்கப்படாமல் இருந்த இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக அணியில் சேர்க்கப்பட்டது மட்டுமில்லாமல், அணியின் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரோஹித் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து, அவரை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம் என ஆஸ்திரேலியா அணியின் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய லயன், “ரோஹித் சர்மா உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். எனவே அவர் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்துவருகிறார். ஆனால் நாங்கள் அவரை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். அவருக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம்.
'ரோஹித்தை வீழ்த்த திட்டம் தீட்டியுள்ளோம்' அதேசமயம் இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே மிகவும் பொறுமையான நபர். களத்தில் ஒருபோதும் அவர் ஆக்ரோஷத்துடனோ அல்லது வாக்குவாதத்தில் ஈடுபட்டோ நான் பார்த்ததில்லை.
மேலும் அவரும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. இதனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெல்வதற்கான திட்டங்களை நாங்கள் ஆலோசித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: AUS vs IND: சிட்னி மைதானத்தில் 25% பார்வையாளர்களுக்கு அனுமதி!