ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர், லபுசாக்னே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வார்னர் 41 ரன்களில் வெளியேற, லபுசாக்னே 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மித், ஹெட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதில் ஸ்மித் அரைசதமடித்து அசத்தினார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களை குவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து தனது இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டிம் பெய்ன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து டிம் பெய்னும் தனது பங்கிற்கு அரைசதமடித்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 467 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 114 ரன்களை சேர்த்தார். நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பிளண்டல் 15 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் நியூசிலாந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியில் டாம் லேதம் 9 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 2 ரன்களுடனும் களத்திலுள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ், பாட்டின்சன் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: சதத்தை நழுவவிட்ட டி காக்: சொந்த மண்ணில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா