மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ’பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (டிச.28) நடைபெற்றது.
இதில் 227 ரன்களுடன் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியின் ரஹானே-ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் ரஹானே 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த ரவீந்திர ஜடேஜாவும் 57 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்களும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை எடுத்து, முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 112 ரன்களையும், ஜடேஜா 57 ரன்களையும் எடுத்தனர்.
தொடர்ந்து, 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில், ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து வந்த லபுசாக்னேவும் 28 ரன்களில் நடையைக் கட்ட, தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியனுக்குச் சென்றார்.
இதனால் 71 ரன்களுக்குள்ளாகவே ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மேத்யூ வேட்டுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார்.
பின்னர் மறுமுனையில் விளையாடிவந்த மேத்யூ வேட் 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரையடுத்து டிராவிஸ் ஹெட்டும் 17 ரன்களில் வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டிம் பெய்னும் ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவும் என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.
ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த காமரூன் கிரீன்-பாட் கம்மின்ஸ் இணை, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளித்து, விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் காமரூன் கிரீன் 17 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் 2 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர உள்ளது.
இதையும் படிங்க : ரொனால்டினோ கைது முதல் மாரடோனா மறைவு வரை...2020ஆம் ஆண்டின் கால்பந்தாட்ட நிகழ்வுகள் ஓர் பார்வை!