ஆஸ்திரேலியாவில் சுறுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பெர்த்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியில் மார்னுஸ் லபுசாக்னே, ட்ராவிஸ் ஹெட் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னுஸ் லபுசாக்னே 143 ரன்களை விளாசினார். நியூசிலாந்து அணி தரப்பில் சௌதி, வாக்னர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஆட்டமிழந்தனர். அந்த அணியின் ராஸ் டெய்லெ மட்டும் நிலைத்து ஆடி 80 ரன்களை சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.