ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடைபெற்றஇவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கான்பராவில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. ஆனால் அது அவர்களுக்கு பலனலிக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபக்கர் ஸமான் 2 ரன்களிலும், ஹாரிஸ் சோஹைல் 6 ரன்களிலும், ரிஸ்வான், ஆசிப் அலி ஆகிய முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கேப்டன் பாபர் அசாம் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த அஹ்மத் அதிரடியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சோதித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 50 ரன்களிலும், அஹ்மத் 62 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்தது.