ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பரவிவரும் காட்டுத்தீயால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரம் வீடுகள், 75 லட்சம் ஏக்கர் அளவிலான வனப்பகுதிகள் தீயில் எரிந்த நாசமாகின. மேலும், இதில் லட்சக்கணக்கான உயிரினங்களும் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கப்பட்டுவருகிறது.
இதனிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, சமீபத்தில் தனது டெஸ்ட் தொப்பியை ஏலத்தில் விட்டு அதிலிருந்து கிடைத்த ஒரு மில்லியன் டாலர்களை காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்திற்கு வழங்கினார். இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தற்போது முன்வந்துள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி 8ஆம் தேதி புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் என்ற பெயரில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி, ஷேன் வார்னே தலைமையிலான அணியை எதிர்கொள்கிறது.