ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை சேர்த்தது. மார்னஸ் லபுசானே 215 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து, நேற்றைய இரண்டாம் ஆட்டநாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இப்போட்டியின் மூன்றாம் ஆட்டநாள் இன்று தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் லயன், வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் ஆகியோரது பந்துவீச்சுக்கு பதில் தெரியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், நியூசிலாந்து அணி 95.4 ஓவர்களில் 251 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸி. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் கிளென் ஃபிலிப்ஸ் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயான் ஐந்து, பெட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுளை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 203 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 23 ரன்களிலும், ஜோ பர்ன்ஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.