ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
நாங்கள் இந்தப் போட்டியை நாக் அவுட் போட்டியாகத்தான் கருதுகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் தெரிவித்திருந்தார். அவர் பங்கேற்ற 100ஆவது போட்டி இதுவாகும்.
இலங்கை அணியின் கேப்டன் சமிரா அத்தாபட்டு இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்தது. இலங்கை அணியின் கேப்டன் சமிரா அத்தாபட்டு 50, அனுஷ்கா சஞ்சீவானி 25, உமேஷா திமாசினி 20 ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நிகோலா கெரி, மோலி ஸ்டிரானோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 123 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலே (0), பெத் மூனி (6), ஆஷ்லி கார்ட்னர் (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களில் 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் தடுமாறியது.
இந்த இக்கட்டான நிலையில், மெக் லானிங் - ரேச்சல் ஹைன்ஸ் ஜோடி சிறப்பாகப் பேட்டிங் செய்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த ஜோடி 95 ரன்களைச் சேர்த்த நிலையில், ரேச்சல் ஹைன்ஸ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து நிகோலா கெரி ஐந்து ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஆறு பந்துகளில் நான்கு ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், களத்திலிருந்த எல்லிஸ் பெர்ரி மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்ததால், ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டை இழந்து 123 ரன்களை எட்டியது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இதையும் படிங்க:டி20 - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி திரில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா!