ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பிங்க் பால் போட்டியாக நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 589 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வார்னர் 335 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி யாசிர் ஷாவின் (113) சதத்தால், 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனால், 289 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 82 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக, தொடக்க வீரர் ஷான் மசூத் 68 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயான் ஐந்து, ஹசல்வுட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.