ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசாத் ஷஃபிக் 76 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் இணை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை பிரித்து மேய்ந்தது.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரை சதமடித்து அசத்த அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது. தொடர்ந்து அதிரடியில் மிரட்டி, வந்த வார்னர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 22ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.