ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகப் பெர்த்தில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, மார்னுஸ் லபுசாக்னே சதத்தால், முதல்நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் லபுசாக்னே 143 ரன்களுக்கு அட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் அரைசதமடித்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்கள், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்களோடு முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மார்னுஸ் லபுசாக்னே 143 ரன்களையும் ட்ராவிஸ் ஹெட் 56 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி, நெய்ல் வாக்னர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜீட் ராவல் ஒரு ரன்னிலும் டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் கணக்கை உயர்த்த தொடங்கினர்.
இதில் வில்லியம்சன் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ராஸ் டெய்லர் தனது 33ஆவது டெஸ்ட் அரைசதத்தைக் கடந்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 109 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.
அந்த அணியில் ராஸ் டெய்லர் 66 ரன்களுடனும் பி.ஜே. வாட்லிங் ரன் ஏதும் எடுக்காமலும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளையும் ஹசில்வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க:முதலாவது டெஸ்ட்: லபுசாக்னே சதத்தால் ஆஸ்திரேலியா வலிமை