கடந்த மூன்றரை மாதங்களாக இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஃபீவர் குறைந்தபாடு இல்லை. முதலில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டை, அதன்பின் நடந்த கிளாசிக் டெஸ்ட் தொடராக கருதப்படும் ஆஷஸ் தொடரும் சமன். மாடர்ன் டே கிரிக்கெட்டில் இப்படி ஒரு போட்டியா, ’ரியல் கிரிக்கெட் இஸ் பேக்’ என பலரும் க்ரேஸூடன் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்த பின் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியனும், எழுத்தாளருமான அன்டி சாஸ்ட்ஸ்மேன் தனது ட்விட்டர் பதிவில், ’இங்கிலாந்து அணி உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெறாமல் உலகக்கோப்பையை வென்றது, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வி அடையாமல் தொடரை இழந்துவிட்டது’ என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில், ’உலகக்கோப்பை என்பது இங்கு பலருக்கும் பெயருக்கு பின்னால் போடப்படும் டிகிரி பட்டம் போலதான்’. ஏனெனில், கிரிக்கெட் போட்டியைக் கண்டுபிடித்த நாடான இங்கிலாந்துக்கு இதுவரை அது கவுரவ பிரச்னையாக இருந்துவந்தது. 1975 முதல் 2015ஆம் ஆண்டுவரை நடைபெற்ற 11 உலக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி மூன்றுமுறை 1979, 1987, 1992 இறுதிச் சுற்றுவரை சென்று, தனக்கான டிகிரி பட்டத்தை வாங்கத் தவறியது.
இதனால், எப்படியாவது தங்களது அணியின் பெயருக்குப் பின்னால் உலகக்கோப்பை சாம்பியன் என்று வரவேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தீர்க்கமாக இருந்தனர். இந்த சூழலில் 2019உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த இடைவேளையில் இங்கிலாந்து அணி இதற்காக தயாரானது. அதுமட்டுமில்லாமல், அவர்கள் மீது படையெடுத்து வந்த அணிகளையெல்லாமல் வீழ்த்தி வின்னிங் ஃபார்மில் இருந்தது. இதனால், சொந்த மண்ணில் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என பலரும் நினைத்தனர்.
நினைத்ததைப் போலவே, உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டிக்குள் இங்கிலாந்து அணி நான்காவது முறையாக நுழைந்தது. கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் இங்கிலாந்து - நியூசிலாந்துக்கு இடையேயான இறுதிப் போட்டி நடைபெற்றது. ஒரு ஓவர் த்ரோவால் அந்த போட்டி சமனில் முடிந்தது. அதன்பின், கிரிக்கெட்டின் மினி வெர்ஷனான சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது.
இரு அணிகளும் வெற்றி தோல்வி இரண்டுமே பெறவில்லை. ஆனால், இந்த இடத்தில் ஐசிசி பவுண்டரி விதிமுறையை கணக்கிட்டது. அதன் அடிப்படையில் 26-17 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிதான் சாம்பியன் என அறிவித்தது. 45 ஆண்டுகாலமாக வாங்க முடியாத அந்த கோப்பையையை (டிகிரியை) ஐசிசி விதிமுறைப்படி இங்கிலாந்து அணி பெற்றது.