ஆஸ்திரேலியாவில் இம்மாதம் 21ஆம் தேதி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. மொத்தம் பத்து அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும்விதமாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி, பாப் பாடகி கேட்டி பெர்ரி ஆகியோரின் உருவங்களை, மெல்போர்னில் உள்ள ஐகானிக் ஹோசியர் லேனில் உள்ள சுவர்களில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதனை டெய்லா ப்ரோக்மேன் என்ற ஓவியக் கலைஞர் வரைந்துள்ளார். இதனிடையே இந்த ஓவியங்களை எல்லிஸ் பெர்ரி இன்று அறிமுகம் செய்துவைத்தார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக உள்ள எல்லிஸ் பெர்ரி, கடந்தாண்டின் ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார். இவர் இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 என 231 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 4500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் எல்லிஸ் பெர்ரி முக்கியத்துவம் வாய்ந்த வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.