ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி டி20 தொடரில் விளையாடிவருகிறது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனிடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் களமிறங்கின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்பின் களமிறங்கிய இலங்கை அணி இம்முறையும் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் நிரோஷன் டிக்வெல்லா ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 13 ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் குசல் பெர்ரேரா - அவிஷ்கா பெர்னான்டோ இணை ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ரன் சேர்த்தது. பின்னர் அவிஷ்கா பெர்னான்டோ 20, ஒஷாடா பெர்னான்டோ 6 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய குசல் பெர்ரேரா அரைசதம் அடித்தார்.
இறுதியில் அவரும் 57 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைக் குவித்தது. பனுக்கா ராஜபக்சா 17 ரன்னுடனும் லசித் மலிங்கா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்துகொண்டிருக்கிறது.