ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக டேவிட் வார்னர் 154 ரன்களில் வெளியேறினார்.
அதன் பின் லபுசாக்னேவுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வடே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதில் சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து மேத்யூ வடே தனது பங்கிற்கு அரைசதமடிக்க, ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை தாண்டியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வடே 60 ரன்கள் அடித்திருந்த நிலையில் சொஹைலிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய லபுசாக்னே 150 ரன்களை கடந்தார். அதனைத் தொடர்ந்து இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப் பட்ட லபுசாக்னே 185 ரன்களில் அஃப்ரிடியிடம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 580 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் யாஷிர் ஷா நான்கு விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் சொஹைல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் அஸார் அலி 5 ரன்களிலும், ஹாரிஸ் சொஹைல் 8 ரன்களிலும், அசாத் ஷாஃபிக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம், ஷான் மசூத்துடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஷான் மசூத் 27 ரன்களுடனும், பாபர் ஆசம் 20 ரன்களுடனும் களத்திலுள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும், பாட் கம்மிங்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில் சதமடித்து அசத்தினார் கோலி!