ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு ஆட்டமாகப் பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. மார்னஸ் லபுஸ்சேன் 110 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 143 ரன்களில் வாக்னெரின் பந்துவீச்சில் போல்டானார். லபுஸ்சேன் இன்னும் 7 ரன் எடுத்திருந்தால் தொடர்ந்து 3 டெஸ்ட்களில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 146.2 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.