ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (டிச.26) மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்நிலையில் தனது குழந்தை பிறப்பு காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய கேப்டன் விராட் கோலி விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக அஜிங்கியே ரஹானே அணியை வழிநடத்தவுள்ளார்.
சச்சின் அட்வைஸ்
இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின், "பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை உங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் அதிக ரன்களை எடுத்து, எதிரணியை குறைந்து ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். மேலும் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் யாரேனும் ஒரு வீரர் அதிரடியான மற்றும் நிலைத்து ஆடும் முறையைக் கைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய பேட்டிங் வரிசை ஒரு கலவையாக இருக்கும்.
இந்த தொடரின் போது சரியான திட்டமிடல், ஒழுக்கம், சூழ்நிலையை சமாளிப்பது ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நீங்கள் முதலில் திட்டமிட்டு, அதற்கேற்றார் போல் உங்களது செயல்முறையை மாற்றியமைக்க வேண்டும்.
இத்தொடரின் முதல் போட்டியை நீங்கள் இழந்துள்ளீர்கள். அதனால் அடுத்த போட்டியில் வெற்றியை எதிர்த்துப் போராடுவதே ஒரே வழி என்று என்னுங்கள். உங்களது செயல்திறன் மட்டுமே தோல்விகளிலிருந்து காப்பாற்றும். அதுவே உங்களின் வெற்றி குறித்த நேர்மறையான சிந்தனையையும் போக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'கோலியைப் போல் ஆக்ரோஷமானவர் ரஹானே' - பாராட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்!