ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி 0-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை காலை 9.10 மணிக்கு கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
நாளைய போட்டியில் இந்திய அணி தோல்வியடையும்பட்சத்தில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா:
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில போட்டிகளாக தோல்வியைத் தழுவி, பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இதனால் விராட் கோலியின் கேப்டன்சி குறித்த சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
அதேசமயம் எப்போதும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தவர்களான பும்ரா, ஷமி, சஹால் ஆகியோர் இத்தொடரில் வழக்கத்திற்கு மாறாக ரன்களை வாரிவழங்கியுள்ளனர். இதனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 350+ ரன்களைக் குவித்தது.
அதேசமயம் தொடக்க வீரராகக் களமிறங்கும் மயங்க் அகர்வால் ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் அதனை பெரிய இலக்காக மாற்றுவதற்குத் தவறி வருகிறார். அவரைப் போலவே ஸ்ரேயாஸ் ஐயரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்து வருகின்றனர்.
மேலும் இத்தொடரில் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளராக நவ்தீப் சைனி இருப்பது இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தின்போது அவருக்கு பதிலாக அறிமுக வீரர் நடராஜன் தங்கராசு அணியில் இடம்பெறுவார் என கிரிக்கெட் வல்லூநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாளைய போட்டியில் இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அணியில் கண்டிப்பாக மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்திய அணி:விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன், நடராஜன்.
ஆஸ்திரேலியா:
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய அணிக்கெதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியுள்ளது.
மேலும் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் - டேவிட் வார்னர் இணை தொடர்ச்சியாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலிமை சேர்த்து வருகின்றனர். அதேபோல் மூன்றாவது வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து சதங்களை விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் - மேக்ஸ்வெல்
மேலும் நடுவரிசையில் லபுசாக்னே, மேக்ஸ்வேல் இருவரும் அணிக்கு பெரும் பலமாக இருந்து வருகின்றனர். அதிலும் மேக்ஸ்வெல்லின் ஃபார்ம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இருப்பினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த வார்னர், மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக டி ஆர்சி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் வார்னர் இடத்தில் மேத்யூ வேட், லபுசாக்னே அல்லது அலெக்ஸ் கேரி ஆகியோரில் ஒருவர் தான் களமிறங்குவார் என ஆஸி., அணியின் கேப்டன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சு தரப்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோரது வேகம் ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறது. அவர்களுடன் ஸாம்பாவின் சுழலும் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை வழங்கி வருகிறாது.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து கம்மின்ஸிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மாற்று வீரராக சீன் அபெட் சேர்க்கபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
நாளைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெரும் பட்சத்தில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி:ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மத்தேயு வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.
இதையும் படிங்க:இரண்டாவது ஒருநாள்: விரக்தியில் குறியீடுகளை உதைத்த பும்ரா!