ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இப்போட்டியின்போது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஜடேஜா காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக களமிறங்கிய யுஸ்வேந்திர சஹால், மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதையடுத்து ஜடேஜாவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஒருவாரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளிலிருந்து ஜடேஜா விலகுவதாக பிசிசிஐ அறிவித்து. மேலும் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்களை விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கரோனா!