ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், மற்றொன்றில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியைக் காண 25 விழுக்காடு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மெல்போர்னிலிருந்து சிட்னிக்குச் சென்ற இந்திய அணி வீரர்களுக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.