கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது மீண்டும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
அதேசமயம் இந்த ஆண்டு இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் திட்டமிட்டுள்ளன. சமீபத்தில் இத்தொடருக்கான தற்காலிக அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான மைதானங்கள் குறித்த அறிவிப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று (அக்.22) அறிவித்துள்ளது.
அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சிட்னி மைதானத்திலும், கடைசி ஒருநாள் போட்டி ’அடிலெய்ட் ஓவல்’ மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும், கடைசி இரண்டு போட்டிகள் சிட்னி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தாருங்கள் - ரசிகர்களுக்கு பிராவோ வேண்டுகோள்