இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. மேலும் இது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 100ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்துள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் சுப்பன் கில், முகமது சிராஜ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமானார்கள்.
டாஸ் வென்ற ஆஸி.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி அந்த அணியின் ஜோ பர்ன்ஸ் - மேத்யூ வேட் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மேத்யூ வேட்டும் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
நட்சத்திர வீரர்கள் சொதப்பல்
இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வினின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார். பின்னர் லபுசாக்னேவுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதையடுத்து 38 ரன்களில் டிராவிஸ் ஹெட், பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ன்ஸ் லபுசாக்னே 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் முகமது சிராஜ் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் விக்கெட்டையும் பதிவுசெய்தார்.
தடுமாறிய ஆஸி...
பின்னர் வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுசாக்னே 48 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:'ராகுலை சேர்க்காதது ஏன்?' - ஸ்ரீகாந்த் கேள்வி