இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது பகலிரவு ஆட்டமாக கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இதில் கேப்டன் விராட் கோலி மட்டுமே அரைசதம் கடந்து அணிக்கு உதவினார்.
சுழலில் மிரட்டிய அஸ்வின்
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அனுபவம் கற்றுத்தந்த பாடம்
நேற்றைய ஆட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், "இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை எனது முதல் ஓவரிலேயே கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரரை உங்களது முதல் ஓவரிலேயே வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.
நான் கடந்த 18 மாதங்களாக நான் விளையாடி ஒவ்வொரு போட்டிகளிலும் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதிலும் கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கிடைத்த அனுபவம், இம்முறை எனக்கு உதவியாக அமைந்தது.
ஏனெனில் கடந்த முறை நான் பந்துவீசியபோது ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக ரன்களைக் கட்டுப்படுத்த தவறினேன். அப்போது நான் அவர்களுக்கு எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். அதன் பயனாக அத்தொடரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டின்போது முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன்.
தற்போதும் அதனையே செய்ய விரும்புகிறேன். அதனால் இத்தொடர் முழுவது கவனம் செலுத்திவருகிறேன். ஏனெனில் என்னை மெருகேற்றிக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: பரபரப்பான ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் வெற்றி!