ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை காலை 9.10 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே ஒருநாள் தொடரை தக்கவைக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி:
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நேற்று பேட்டிங், பவுலிங் என இரு தரப்பிலும் சொதப்பியதால் தோல்வியைச் சந்தித்தது. அதிலும் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறியதாலும், ரன்களைக் கட்டுப்படுத்தவும் தவறினர்.
பின்னர் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இதனால் நாளைய போட்டியின்போது இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி பந்துவீச்சில் புதுமுக வீரர் நடராஜன் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர் பந்துவீச்சால் எதிரணியினரை திக்குமுக்காடச் செய்த நடராஜன், சர்வதேச போட்டியிலும் அதனைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் மனீஷ் பாண்டே இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் சூழல் அறிந்து அதற்கேற்ப மனீஷ் பாண்டே அணிக்கு உதவுவார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் பந்துவீச்சில் ஜாஸ்பிரீத் பும்ரா, ஷமி ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நாளையப் போட்டியும் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளதால், இந்திய அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.