நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிதான ஆட்டத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பர்ன்ஸ் - வார்னர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 18 ரன்கள் எடுத்தபோது நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய லபுஸ்சாக்னே - வார்னர் ஜோடி சேர்ந்து நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடி வந்த வார்னர் 45 ரன்கள் எடுத்தபோது வாக்னர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். மறுமுனையில் பொறுமையாக ஆடிவந்த லபுஸ்சாக்னே அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஸ்மித் - லபுஸ்சாக்னே ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க ஆஸ்திரேலியா ஸ்கோர் மெல்ல மெல்ல உயரத்தொடங்கியது.
இதையடுத்து ஸ்மித் அரைசதத்தை பூர்த்தி செய்ய, இந்தத் தொடரில் உச்சக்கட்ட பார்மில் இருந்து வரும் லபுஸ்சாக்னே சதமடித்தார். 63 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்தில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஸ்மித். இதனையடுத்து களமிறங்கிய வேட் 22 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்த நிலையில், லபுஸ்சாக்னே 130, வேட் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 90 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் கிராண்ட்ஹோம் 2, வாக்னர் ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.