தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின் - Indiavssouthafrica

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

ashwin

By

Published : Oct 6, 2019, 1:31 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 502 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களில் சுருண்டது. இந்திய தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அதிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 324-4 என எடுத்திருந்தபோது மீண்டும் டிக்ளர் செய்து, தென் ஆப்பிரிக்காவுக்கு 395 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்.ஆப்பிரிக்க வீரர் எல்கர், 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால், அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் தெ.ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை தொடங்கிய ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் மார்க்ரம், தியூனிஸ் ப்ரூயூன் ஆகியோர் துரத்தலை ஆரம்பித்தனர். அப்போது இன்றைய நாளின் இரண்டாவது ஓவரிலேயே அஸ்வின் இந்திய அணிக்கு விக்கெட்டை பெற்றுத்தந்ததோடு சாதனைப்பட்டியலிலும் தடம் பதித்தார்.

அஸ்வின் வீசிய 11ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட ப்ரூயூன் 10 ரன்னில் போல்டானார். இது அஸ்வினின் 350ஆவது விக்கெட்டாகும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் மிகக் வேகமாக 350 (66 போட்டிகள்) விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு வேகமாக 300 விக்கெட்டுகளை (54 போட்டிகள்) வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பின் அணியில் அஸ்வின் தற்போதே இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால் அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே அஸ்வின் தனது சாதனை வேட்டையை துவங்கி அனைவருக்கும் தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details