டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 115 ரன்கள் எடுத்தாலும், தங்களின் சிறப்பான பந்துவீச்சால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் மூன்றாவதாக களமிறங்கி 19 பந்துகளில் 37 ரன்கள் (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து அசத்தினார். எனினும் அவர் பந்துவீசியபோது வித்தியாசமான முறையில் பந்துவீசியது ரசிகர்களை குழப்பமடையச் செய்தது. அஸ்வின் அந்த இறுதி ஓவரில் வீசிய ஐந்தாவது பந்துதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது.
அஸ்வின் அந்த பந்தை வீசும்போது அவரது இடக்கை எவ்வித அசைவுமின்றி இருந்தது. இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. சிறந்த பந்துவீச்சாளரான அஸ்வின் தெருவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களைப் போன்று பந்து வீசியதால் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்துவருகின்றனர்.