தமிழ்நாடு

tamil nadu

கிரிக்கெட்டில் அண்ணன் தலையை உடைத்த தம்பி - ஆஸி.யில் சுவாரஸ்யம்!

By

Published : Nov 17, 2019, 9:01 PM IST

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

ashton agar

கிரிக்கெட் போட்டிகளில் அண்ணன், தம்பிகள் ஒரே அணியில் விளையாடுவது என்பது பொதுவான விஷயம்தான். இந்த அண்ணன் தம்பிகள் சில உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் எதிரணிகளில் களமிறங்கும் சூழலும் ஏற்படும். அவ்வாறு அண்ணன், தம்பிகள் இப்படி எதிரெதிர் அணிகளில் களமிறங்கும் சமயங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறுவதுண்டு.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய சம்பவத்தில் தம்பி அடித்த பந்தை அண்ணன் கேட்ச் பிடிக்க முயன்றபோது அது அண்ணனின் தலையை பதம்பார்த்துவிட்டது. ஆம் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் மார்ஷ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - சவுத் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களைக் குவித்தது. இதன்பின் துரத்தலை தொடங்கிய சவுத் ஆஸ்திரேலியா அணியின் காலம் பெர்குசன் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் வரிசையாக ஆட்டமிழந்ததால் அந்த அணி 171 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது ஸ்டாய்னிஸ் வீசிய 41ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட வெஸ் அகார், பந்தை மிட்-ஆன் திசையில் தூக்கி அடித்தார். அச்சமயத்தில் அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த வெஸ் அகரின் மூத்த சகோதரர் ஆஷ்டன் அகார் அதை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் கால் இடறி கீழே சறுக்கியதால் பந்து அவரது நெற்றிப் பொட்டை பதம் பார்த்தது. இதனால் ஆஷ்டன் அகார் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

பந்து தாக்கியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதோடு ஆஷ்டனின் முகம் முழுவதும் ரத்தம் வழிந்தது. பின்னர் மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் ஆஷ்டன்.

அதன்பின்பும் ஒற்யை ஆளாக போராடிய பெர்குசன், எதிரணியை மிரட்டினார். எனினும் அவர் ஒரு ஓவர் எஞ்சியிருந்த சமயத்தில் 127 ரன்கள் (125 பந்துகள், 9 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள்) ஆட்டமிழந்தால் இப்போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. சிறப்பாக பந்துவீசிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பவுலர் கோல்டர் நைல் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முதலில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கின்போது ஆஷ்டன் அகார், தனது இளைய சகோதரர் வெஸ் அகாரின் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். பின்னர் மீண்டும் அவரை கேட்ச் பிடித்து அவுட் ஆக்கிவிடலாம் என்று எண்ணிய அவருக்கு ஆப்பு தான் மிச்சமானது.

ABOUT THE AUTHOR

...view details