தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 45, கேப்டன் பின்ச் 42 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஸ்டெயின், டப்ராய்ஸ் ஷாம்சி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி சேஸிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டூபிளஸ்ஸிஸ் தவிர்த்து, டி காக் 2, வேன் டெர் டஸ்ஸன் 6, ஸ்மட்ஸ் 7, மில்லர் 2 என மற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையாகத் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
அப்போது எட்டாவது ஓவரை வீசிய ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகார் தொடர்ச்சியாக டூபிளஸ்ஸிஸ் 24, பிலுக்குவாயோ 0, ஸ்டெயின் 0 ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். அதன்பின் ஓரளவு தாக்குப்பிடித்த ரபாடா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 14.3 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.