இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சல் மார்ஷ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வழக்கம்போல் ஆரம்பத்திலேயே தங்களது தொடக்க வீரர்களை இழந்தது. 14 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லாகபுக்ஸாக்னே ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்த நிலையில், மார்னஸ் லாகபுக்ஸாக்னே 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த மேத்யூவ் வேட் (19), மிட்சல் மார்ஷ் (17), டிம் பெய்ன் (1), பெட் கமின்ஸ் (0) ஆகியோர் வழக்கம் போல சொதப்ப, மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி 187 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாறியது. இந்தத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த குறைந்த ஸ்கோர் இதுவாகும்.
இதன்பின்னர், ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எட்டுமா என ரசிகர்கள் நினைத்தபோது, பீட்டர் சிடில் - நாதன் லயான் ஜோடி அதிரடியாக பேட்டிங் செய்தது. இந்த ஜோடி 37 ரன்களை சேர்த்த நிலையில், நாதன் லயான் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பீட்டர் சிடில் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால், ஆஸ்திரேலிய அணி 68.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 69 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவருகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி இந்தத் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.