இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் திருவிழாதான் ஆஷஸ் தொடர். இரு நாட்டு ரசிகர்களும் அரங்கம் அதிரும்படி கத்தி ஆரவாரத்துடன் ஒரு திருவிழாவாகதான் ஆஷஸை கொண்டாடுவார்கள். ஏனெனில், மற்ற நாட்டு டெஸ்ட் தொடரைக் காட்டிலும் ஆஷஸ் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே ஸ்பெசல் தான்.
இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றதால், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று முன்னிலை பெறப்போவது யார் என்பதற்கான போட்டியாக நான்காவது போட்டி அமைந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தலையில் காயம்பட்ட பின் மீண்டும் அணிக்குத் திரும்பிய ஸ்மித் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். மார்னஸ், டிம் பெய்ன், ஸ்டார்க் ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.
அதன்பின், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் ஒருசில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர். அந்த அணியின் ரோரி பர்ன்ஸ் 81 ரன்களும், ஜோ ரூட் 71 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், 301 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து இழந்தது. இதனால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை விட 196 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பவுலர்களின் ஆதிக்கம் தொடரவே, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும், ஸ்மித் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று 82 ரன்கள் எடுத்தார். பின்னர் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. கடினமான இலக்கான 384 ரன்களை எதிர்த்து ஆட வந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முந்தைய இன்னிங்ஸில் ஓரளவு தாக்குப்பிடித்த ரோரி பர்ன்ஸும், ஜோ ரூட்டும் ரன் எடுக்காமலே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர். இருவரையும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பி கம்மின்ஸ் கெத்து காட்டினார்.