முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அருண் ஜேட்லி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இவரது மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் வெளியிட்ட ட்வீட் மிக உருக்கமாக இருக்கிறது.
அவர் வெளியிட்ட பதிவில், 'அருண் ஜேட்லியின் மறைவு எனக்கு வலியை கொடுக்கிறது. ஒரு காலத்தில் டெல்லி கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானோருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், நான் உட்பட பல டெல்லி வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததே அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோதுதான்.
அந்தவகையில், டெல்லி கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு வழங்கியதில் அவர் மிகப்பெரிய பங்காற்றினார். அவர் வீரர்களின் தேவைகளையும், அவர்களது பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார். தனிப்பட்ட முறையில் நான் அவருடன் நல்ல தொடர்பை வைத்திருந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டிருந்தார்.
ஆம், சேவாக் குறிப்பிட்டதை போல, அவருக்கும் அருண் ஜேட்லிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஏனெனில், 2004இல் சேவாக்கின் திருமண விழா அருண் ஜேட்லியின் பங்களாவில்தான் நடைபெற்றது. உங்களது மகனின் திருமண விழாவை எனது பங்களாவில் வைத்துக்கொள்ளுங்கள் என சேவாக்கின் தந்தையிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது, அவர் அந்த பங்களாவை தனிப்பட்ட முறையில் இல்லமாக பயன்படுத்தவில்லை என்பதால் இவ்வாறு முடிவு செய்தார். இதுமட்டுமின்றி, திருமண விழாவில் பங்கேற்கும் விருந்தினர்களுக்காக பல ஏற்பாடுகளையும் அவர் செய்து தந்தார். ஆனால், சேவாக் திருமணத்தின்போது அவர் பெங்களூருவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்ததால் அவர் பங்கேற்வில்லை.
சட்டம் படித்துவிட்டு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லியைதான் பலருக்குத் தெரியும். ஆனால், கிரிக்கெட் மீதும் அதீத ஈர்ப்பு கொண்டவராகவே அவர் இருந்துள்ளார். டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும், பிசிசிஐயின் துணை தலைவராகவும் இருந்த அருண் ஜேட்லியைப் பற்றி சேவாக்கின் இந்த ட்வீட் மூலம்தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது. அவர் டி.டி.சி.ஏ தலைவராக இருந்த காலத்தில்தான் சேவாக், கவுதம் கம்பிர், கோலி, இஷாந்த் ஷர்மா, ஷிகர் தவான் போன்ற திறமையான டெல்லி வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றனர்.
அருண் ஜேட்லி டிடிசிஏ தலைவராக இருந்தபோது 1999 முதல் 2013 வரை 13 ஆண்டுகளுக்கு (டி.டி.சி.ஏ) டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும், 2009இல் பிசிசியின் துணைத் தலைவராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.