இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டும் நோக்கில் ‘புஷ்ஃபயர் பாஷ்’ கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்தத் தொடரில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியின் இடையே, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லீஸ் பெர்ரியின் வேண்டுகோளை ஏற்று, சச்சின் டெண்டுல்கர் ஐந்தரை ஆண்டுகள் கழித்து ஒரு ஓவர் பேட்டிங் செய்தார். அதில் முதல் நான்கு பந்துகளை எல்லீஸ் பெர்ரி வீச, ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தை மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை சதர்லேண்ட் வீசினார்.
இந்நிலையில், சச்சினுக்கு எதிராக தான் இரண்டு பந்துகளை வீசியது குறித்து அன்னாபெல் சதர்லேண்ட் கூறுகையில், "சச்சின் பேட்டிங் செய்துபோது நான் மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தேன். அப்போது எல்லீஸ் பெர்ரி நான்கு பந்துகளை வீசிய பிறகு ஓவரில் மீதமுள்ள இரண்டு பந்துகளை வீச என்னிடம் பந்தை வழங்கினார். சச்சினுக்கு எதிராக நான் இரண்டு பந்துகள் வீசிய தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
அவருக்கு எதிராக பந்துவீசும்போது கொஞ்சம் பதற்றகமாகவே இருந்தது. நான் அவருக்கு Half volleyஇல் பந்துவீசினேன், ஆனால் சச்சின் அந்தப் பந்தை தூக்கி அடிக்காமல் நேராகவே அடித்தார். சச்சினுக்கு எதிராக ஒரு ஓவர் பந்துவீசியது எங்களது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கே ஒரு அருமையான தருணமாக இருந்தது" என்றார்.
இதையும் படிங்க:அந்த பந்தில் சச்சின் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்த்தேன்: அக்தரின் ஃபேன் பாய் மொமண்ட்...!