இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து, கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் ஓவரில் பவுண்டரி விளாசிய கோலி அதனைக் கொண்டாடும்விதமாக இதனை 'நோட்ஸ் எடுத்துக்கோங்க' என்ற ஸ்டைலில் அவர்களைக் கலாய்த்தார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. 'திருப்பி அடிக்குறதுல கோலிக்கு நிகர் கோலிதான்' என நெட்டிசன்கள் அவரைக் கொண்டாடினர்.
மைதானத்தில் வில்லியம்ஸை 'நோட்ஸ் புக்' ஸ்டைலில் கலாய்க்கும் கோலி இதனிடையே, கோலியின் அசுரத்தனமான ஆட்டம் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், ”நான் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். கோலியை நீங்கள் சீண்டாதீர்கள் என்று, ஆனால் நீங்கள் கேட்பதில்லை. அதன் விளைவை கோலியின் ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் முகங்களை பார்த்தாலே கோலி அவர்களை எவ்வாறு சிதறடிக்கிறார் என்பது தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
அமிதாப், விராட் கோலியின் ட்விட்கள் அமிதாப்பின் இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள விராட் கோலி, “தங்களின் இந்த வசனம் எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் என்றுமே எனக்கு ஒரு உந்துசக்தி” எனக் குறிப்பிட்டுள்ளார். அமிதாப், விராட் கோலியின் இந்த ட்விட்களை இணையவாசிகள் அதிகமாக லைக், ரீ-ட்வீட் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டநாயகன் விருது பட்டியலில் முதலிடம் பிடித்த கோலி!