கிரிக்கெட் போட்டிகளின் பிறப்பிடம் இங்கிலாந்து என்றாலும் அந்த அணி உலகக்கோப்பைபை 44 ஆண்டுகள் கழித்தே கைப்பற்றியது. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட முதலிரண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் (1975, 1979) சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பலம் பொருந்திய அணியாக பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தமுறை இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அணியாக தடம் பதித்தது.
புதிய சாம்பியன் வந்ததும் அடுத்து நடைபெற்ற உலகக்கோப்பை தொடரும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தது. அதுவரை இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த உலகக்கோப்பை தொடர் முதன்முறையாக 1987இல் இந்தியா, பாகிஸ்தானில் நடைபெற்றது. அது மட்டுமல்லாது இம்முறை ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களிலிருந்து 50 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டன. இதனால் இந்த உலகக்கோப்பை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
அந்தத் தொடரில் அனைத்து அணிகளும் பலம் பொருந்திய அணியாக பார்க்கப்பட்டன. ஆனால் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பலமில்லாத அணி என்றே பலரும் விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலடி தரும்படியாக சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 'நாங்கள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்' என்பதை உணர்த்தியது.
இதன்பின் அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி ஏ பிரிவில் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்தும் பைனலில் நுழைந்தது.
இரு அணிகளும் தங்களின் முதல் உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டேவிட் பூன் 75, வெலேட்டா 45, ஜோன்ஸ் 44 என மேல் வரிசை வீரர்கள் அனைவரும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த அணி 253 ரன்களைக் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ராபின்சன் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். எனினும் தங்களின் பரமவைரியான ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 135 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய பவுலர்களை சோதனை செய்துகொண்டிருந்தது.