பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி, 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் முதல் தொடரை வென்று வரலாற்று சாதனையை படைத்தது.
அதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், ”பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியைப் பின்பற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் கூறுகையில்,
”பாகிஸ்தான் அணி, 263 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதில் பெரும் மகிழ்ச்சி. ஆனால் இதை அவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். அதேபோல் அணியின் கேப்டன் இம்ரான் கான் தனது ஆரம்பகட்ட கேப்டன்சிப்பை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் அவர் இன்னும் அணியின் நிரந்திர கேப்டனாக அனுபவமில்லாதவராகவே உள்ளார்” என தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் மேலும், ”பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய அணியைப் பின்பற்றி நடந்தால் அது அவர்களின் போட்டி திறனை அதிகரிக்க உதவும். ஏனெனில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகளை அதிகரிக்க இந்திய அணி களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல கடுமையான விதிகளைப் பின்பற்றி வருகிறது. இதுபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணியின் மேம்பாட்டிற்காக புது விதிகளை அமல்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
அதேபோல், ”பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பார்த்து தங்களின் திறனை வளர்த்துகொள்ளுதல் மிக மிக அவசியம். ஏனெனில் அவர் தன் அணியை எந்த சூழ்நிலையிலும் பயமின்றி பயணிக்க செய்கிறார். அதுபோல் பாகிஸ்தான் அணியும் போட்டியின் மீதான பயத்தை போக்கி, அவரைப் போல் சூழ்நிலையை உணர்ந்து ஆட்டத்தை ஆடவெண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ஐசிசி தரவரிசை: முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியர்கள்! ஷாய் ஹோப் இமாலய முன்னேற்றம்!