இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளூர் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதற்காக சென்ட்ரல் பஞ்சாப் அணியின் கேப்டனும் பாகிஸ்தான் தொடக்க வீரருமான அஹ்மத் சேஷாத்திற்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 50 விழுக்காடு அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரான குவாத் - ஈ - அஸாம் டிராபிக்காக போட்டியில் சென்ட்ரல் பஞ்சாப் - சிந்த் அணிகள் விளையாடின. அந்தப் போட்டியின் 17ஆவது ஓவரின்போது, கள நடுவர் பந்தை பரிசோதிக்கையில், பந்து சேதமானது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் களநடுவர்கள் இது குறித்து ஆட்ட நடுவரிடம் புகார் கொடுத்தனர். பின்னர் பாகிஸ்தான் விதிகளின்படி இந்த விவகாரம் குறித்து சென்ட்ரல் பஞ்சாப் அணி கேப்டன் சேஷாத் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்த விசாரணையில் ஷேஷாத் ஆஜரானார்.