நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் மேத்யூ வேட் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஃபின்ச் - ஜோஷ் பிலிப்பே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் பிலிப்பே 43 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த ஆரோன் ஃபின்ச் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் முதலில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், அதன்பின் பவுண்டரி, சிக்சர்கள் என விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் அரைசதத்தையும் கடந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 70 ரன்களையும், ஆரோன் ஃபின்ச் 69 ரன்களையும் குவித்தனர்.