பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டரும், கேப்டனுமாகத் திகழ்ந்தவருமான சாகித் அஃப்ரிடி. இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட், 398 ஒருநாள், 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஃப்ரிடி, 9 ஆயிரம் ரன்களையும், 541 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 37 பந்துகளில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் சாகித் அஃப்ரிடி படைத்துள்ளார்.
இந்நிலையில், அஃப்ரிடி இன்று தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது 44ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எனது குடும்பமும், எனது ரசிகர்களும்தான் என்னுடைய மிகப்பெரிய சொத்து” என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அஃப்ரிடியின் பதிவைக்கண்ட ட்விட்டர்வாசிகள், ஐசிசி பதிவேட்டில் உங்களது வயது 41 என உள்ளது. ஆனால் நீங்கள், 'எனது வயது 44' என்று கூறுகிறீர்கள் என்று விமர்சனங்களை முன்வைத்தனர்.