உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் தொடரில் கடைசி இடம் பிடித்தது. இதையடுத்து அந்த அணியின் அனைத்துவிதமான போட்டிகளுக்கும் இளம் வீரர் ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஜிம்பாவே, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரிலும் பங்கேற்க உள்ளது.
இந்த தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. அதன்படி முன்பு தெரிவிக்கப்பட்டது போன்று இளம் வீரர் ரஷித் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு தொடர்களையும் விளையாடவுள்ளது. இளம் வீரர் ரஷித் கானுக்கு, கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் தனது ஆல்-ரவுண்ட் பெர்பார்மன்ஸ் மட்டுமின்றி கூடுதலாக அணியை வழிநடத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.
ரஷித் கான் வயதில் சிறியவராக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு முக்கிய அடையாளமாகவும் டி20 நட்சத்திரமாகவும் உள்ளார். அவர் இதுவரை 62 ஒருநாள் போட்டிகளில் 128 விக்கெட்டுகளையும், 38 டி20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதுதவிர இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்கு 9 விக்கெட்டாக உள்ளது.