உலக கிரிக்கெட்டின் முன்னோடியான டெஸ்ட் கிரிக்கெட்டை பல அணிகள் இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருந்த அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் அணி. கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆப்கான் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
அதன்படி ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் இப்ராஹிம் ஜார்டன் 21 ரன்களிலும் இஷனுல்லா ஜானட் 14 ரன்களிலும், ஹஸ்மத்துல்லா ஷாஹிடி 14 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரஹ்மத் ஷா நிதானமாக விளையாடிவருகிறார். அவர் இதுவரை இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ரன்களை எடுத்துள்ளது. வங்கதேச அணி சார்பில் டைஜுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.