ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்து விளையாடியது.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய குர்பாஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதையடுத்து ஜோடி சேர்ந்த உஸ்மான் கானி - கரீன் ஜனத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உஸ்மான் கானி 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கரீம் ஜனத் அரைசதம் கடந்த கையோடு, 53 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய முகமது நபி தனது பங்கிற்கு 4 சிக்சர்களைப் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைக் குவித்தது.